Russia Ukraine Crisis: உக்ரைன் மீது போர் தொடுத்து இருப்பதால் ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் தனது சாதனங்களின் விற்பனையை அதிரடியாக நிறுத்தி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் தனது சாதனங்கள் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதை அடுத்து ஆப்பிள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதவிர ரஷ்யாவில் ஆப்பிள் பே சேவையும் நிறுத்தப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
"உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எடுத்து இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த கவலை அடைகிறோம். இந்த நேரத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்," என ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"அப்பகுதியில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து விதமான மனித நேய நடவடிக்கைகளை ஆதரித்து, பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு துணை நிற்கிறோம். அங்குள்ள எங்கள் குழுவிற்கு எங்களால் முடிந்த உதவிகளைசெய்கிறோம்," என்றும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களின் விற்பனையும் நிறுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் ஆப்பிள் பே உள்பட அனைத்து சேவைகளும் அந்நாட்டில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இதுதவிர உலகளவில் ரஷ்ய செய்தி ஆப்களை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கி இருக்கிறது. இத்துடன் ரஷ்யா நாட்டு செய்தி நிறுவனங்களின் செயலிகளும் ஆப் ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் கூகுள் நிறுவனம் ரஷ்யா அரசு ஊடகம் தனது சேவைகளில் இருந்து வருவாய் ஈட்டுவதை கூகுள் தடுத்தது. கூகுள் வரிசையில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தன. "உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக ரஷ்யா அரசு நிதி உதவி பெற்று இயங்கி வரும் ஊடக சேவைகளின் கூகுள் மாணிடைசேஷன் சேவையை நிறுத்துகிறோம். கள நிலவரத்தை உற்று நோக்கி, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுப்பது பற்றி முடிவு செய்வோம்," என கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக உக்ரைன் நாட்டு தொழில்நுட்ப அமைச்சர், ரஷ்யாவில் ஆப்பிள் சாதனங்கள் விற்பனை, சேவைகளை தடை செய்ய வலியுறுத்தி ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.