E-scooters catching fire: சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிவப்பு நிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து முதலில் புகை வெளியேறியது.
ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த நிலையில், திடீரென தீப்பிடித்து எரிந்து சில நாட்களே ஆன நிலையில், மற்றும் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து தீப்பிடித்து எரியும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. முன்னதாக தமிழகத்தில் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடித்த சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பியூர் இ.வி.
இம்முறை தீப்பிடித்து எரிந்தது பியூர் இ.வி. நிறுவனத்தின் இ-புளூட்டோ 7ஜி மாடல் ஆகும். இந்த சம்பவம் சென்னையில் அரங்கேறி இருக்கிறது. சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிவப்பு நிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து முதலில் புகை வெளியேறியது. அதன் பின் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உண்மையில் தற்போது எரிந்தது பியூர் இ.வி. நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எனில், கடந்த ஆறு மாதங்களில் தீப்பிடித்து எரிந்த மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இது இருக்கும். பியூர் இ.வி. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் விவரங்களின் படி பியூர் இ.வி. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லி-அயன் ரக பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
தெர்மல் ரன்-அவே:
இதே போன்ற பேட்டரி தான் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரிகள் தெர்மல் ரன்-அவே எனும் நிகழ்வுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த சூழலில் அதிக சூடாகும் போது பேட்டரி மற்றும் உள்புற பாகங்கள் வழக்கத்தை விட அதிக சூடாகும் போது. ஒரு பேட்டரி செல் தெர்மல் ரன்-அவே நிலைக்கு சென்றால், அனைத்து பேட்டரிகளும் அதே நிலைக்கு தானாக சென்று விடும். இவ்வாறு நடக்கும் போது தான் தீப்பிடிக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
உயிரிழப்பு:
முன்னதாக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தின் சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவை சேர்ந்த துரை வர்மா தனது மகள் மோகன பிரீத்தியுடன் வசித்து வந்தார். சமீபத்தில் இவர் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார். ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய வீட்டின் வெளியில் போதுமான இடவசதி இல்லை. இதனால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தனது வீட்டின் ஹாலில் வைத்து சார்ஜ் ஏற்றிவிட்டு உறங்க சென்றார்.
சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்து சிதறி ஸ்கூட்டர் முழுக்க தீ பிடித்துக் கொண்டது. பின் தீ மளமளவென வீடு முழுக்க பரவியது. இதில் இருந்து தப்பிக்க தந்தை துரை வர்மா மற்றும் அவரது மகள் மோகன பிரீத்தி வீட்டின் குளியல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். வீடு முழுக்க புகை மூட்டம் சூழ்ந்ததை அடுத்து மூச்சு விட முடியாமல் தந்தை, மகள் குளியல் அறையிலேயே நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பின் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடரும் தீ விபத்து:
நாடு முழுக்க பல எலெக்ட்ரிக் வாகனங்களில் தொடர்ந்து தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆரவம் காட்ட துவங்கி இருக்கும் நிலையில், இது போன்ற சம்பவங்களால் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முடிவை பரிசீலனை செய்து வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இவற்றின் பாதுகாப்பு குறித்து முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பேட்டரிகளுக்கு முறையான கூலிங் சிஸ்டம் வசதி இல்லாததே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணம் என கூறப்படுகிறது.