
மும்பை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் (Mumbai Consumer Commission) அண்மையில் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பு, ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. பழுதான டிவி ஒன்றை விற்ற வழக்கில், அமேசான் நிறுவனம் வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்றும், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "நாங்கள் வெறும் இடைத்தரகர் (Intermediary) மட்டுமே, பொருட்களின் தரத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல" என்ற அமேசானின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், கடந்த ஜனவரி 6 அன்று வழங்கியத் தீர்ப்பில், அமேசான் செல்லர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ASSPL) சேவையில் குறைபாடு இழைத்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. ஒரு ஆன்லைன் சந்தை தளம் (Marketplace), விற்பனையை ஊக்குவித்து அதிலிருந்து வணிக ரீதியான லாபத்தைப் பெறும்போது, விற்பனைக்குப் பிந்தைய வாடிக்கையாளர் சேவையிலிருந்து தங்களைத் விடுவித்துக் கொள்ள முடியாது என்று ஆணையம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பை வழங்கியத் தலைவர் பிரதீப் காடு மற்றும் உறுப்பினர் கௌரி காப்ஸே ஆகியோர் முக்கியமாகக் குறிப்பிட்டது என்னவென்றால்: "ஆன்லைனில் பொருட்களை வாங்கும் ஒரு நுகர்வோருக்கு, அந்தப் பொருளின் உற்பத்தியாளருடன் நேரடித் தொடர்பு இருப்பதில்லை. அவர்களுக்குத் தெரிவதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் தளம் மட்டுமே. நுகர்வோர் ஒரு பிராண்டை மட்டும் நம்புவதில்லை, அந்த ஆன்லைன் தளத்தின் நம்பகத்தன்மையையும் சார்ந்தே பொருட்களை வாங்குகிறார்கள்."
மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் 2018 ஆம் ஆண்டு அமேசானில் ரூ.16,499 விலையில் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிவியை (Full HD LED TV) வாங்கியுள்ளார். டிவி டெலிவரி செய்யப்பட்ட உடனேயே, அதில் மோசமான ஒலி, தெளிவற்ற திரை மற்றும் ரிமோட் வேலை செய்யாதது போன்ற குறைபாடுகள் இருந்துள்ளன. வாடிக்கையாளர் இது குறித்து அமேசானிடம் புகார் அளித்து ரீஃபண்ட் (Refund) கேட்டபோது, அமேசான் அதை மறுத்து, உற்பத்தியாளரை அணுகுமாறு கூறியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர் நுகர்வோர் ஆணையத்தை நாடினார்.
நாங்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஒரு சந்தை தளம் (Intermediary marketplace) மட்டுமே என்றும், பொருட்களைத் தயாரிப்பதோ விற்பதோ இல்லை என்றும் அமேசான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், தங்கள் விதிமுறைகளின்படி தொழில்நுட்ப உதவி மட்டுமே செய்ய முடியும் என்றும் கூறினர். ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், அமேசான் தளம் வழியாக ஒரு பொருள் விற்கப்பட்டால், அது குறைபாடற்றதாக இருப்பதை உறுதி செய்வது தளத்தின் பொறுப்பு என்று தீர்ப்பளித்தது.
இறுதியாக, அமேசான் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில்:
• டிவிக்காக வாடிக்கையாளர் செலுத்திய ரூ. 16,499 தொகையை 6 சதவீத ஆண்டு வட்டியுடன் (பிப்ரவரி 2018 முதல் கணக்கிட்டு) திரும்ப வழங்க வேண்டும்.
• வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 10,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
• வழக்குச் செலவுக்காக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.