மெட்டாவில் மீண்டும் ஆட்குறைப்பு! பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் ஊழியர்கள் கவலை

By SG BalanFirst Published Apr 19, 2023, 10:32 PM IST
Highlights

பணிநீக்க நடவடிக்கைக்குத் தயாராகுமாறு மெட்டா நிறுவனம் தனது மேலாளர்களுக்கு புதன்கிழமையன்று மெமோ மூலம் அறிவுறுத்தியுள்ளது.

மெட்டா குழுமத்தை அதிக செயல்திறன் மிக்கதாக மாற்ற அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஓராண்டாக அவ்வப்போது அறிவிக்கப்பட்ட பணிநீக்க நடவடிக்கைகள் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் மற்றொரு பணிநீக்கச் செயல்பாட்டுக்குத் தயாராகுமாறு மேலாளர்களுக்கு புதன்கிழமை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மெட்டா குழுமத்தின் கீழ் வரும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இதன் மூலம் பாதிக்கப்படுவர் என்று தெரிகிறது.

மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோவில் ஆட்குறைப்புக்குப் பிறகு பணிக்குழுக்கள் மறுசீரமைக்கப்படும் என்றும், பலர் புதிய மேலாளர்களின் கீழ் பணியமர்த்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. "ஏப்ரல் பிற்பகுதியில் தொழில்நுட்ப குழுக்களிலும், மே மாத இறுதியில் வணிகக் குழுக்களிலும் மறுசீரமைப்பு மற்றும் பணிநீக்கங்களை அறிவிப்போம்" என மார்ச் மாதம் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.

மெட்டா சிஇஓ ஜுக்கர்பெர்க் சென்ற மார்ச் மாதம் அறிவித்தபடி, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் மே மாதம் மற்றொரு சுற்று பணிநீக்கம் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 13% பேரை, அதாவது சுமார் 11,000 பேரை குறைத்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் புதிய பணிநீக்க நடவடிக்கை பற்றி கருத்து பெற முயன்றபோது அவர், பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால், மார்ச் மாதத்தில் நிறுவனத்தின் சிஇஓ குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

click me!