
சென்னை மெரினா கடற்கரை திருவள்ளூர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை மெரினாவில் இளைஞர்கள் இன்று காலை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். திருச்சி, மதுரை, கோவையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடற்கரைக்கு விரைந்த மயிலாப்பூர் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே கடற்கரையை ஒட்டிய திருவள்ளூர் சிலை அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அடுத்தடுத்து மெரினாவில் மாணவர்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே பலத்த பாதுகாப்பையும் மீறி மெரினாவில் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தியது காவல்துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரைக்குச் சென்னை மயிலாப்பூர் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரினாவில் மீண்டும் இளைஞர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் செல்போன் மூலம் தகவல் பகிர்வதை தடுக்கும் விதமாக ஜாமர் கருவிகளை பொருத்தவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.