
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இங்கு நேற்று முன்தினம் காலை ஒரு இளைஞரின் துண்டிக்கப்பட்ட தலை பாலித்தீன் கவரில் வைத்து வீசப்பட்டு இருந்தது.
இதேபோல பொத்தேரி அருகே காட்டுப்பாக்கம் கிராமத்தில் தலை இல்லாமல் உடல் மட்டும் இரத்த வெள்ளத்தில் கிடந்தது.
தலை மற்றும் உடலை கைப்பற்றிய காவலாளர்கள் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பொத்தேரி அருகே உள்ள கோனாதி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (31) என்பது தெரியவந்தது.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பாலாஜி மீது செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த கொடூர கொலை குறித்து மணிமங்கலம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை காவலாளர்கள் அமைக்கப்பட்டது.
அவர்கள் நேற்று கோனாதியில் இருந்து காவனூர் வழியாக காட்டுப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருந்த சில வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி இருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதும், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் கையில் சிறிய மூட்டை போன்ற பாலித்தீன் கவர் வைத்திருந்ததும் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து அந்த சந்தேகப்படும்படி இருந்த காட்டுப்பாக்கம், காவனூர் பகுதியை சேர்ந்த இருவரையும் தனிப்படை காவலாளர்கள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கோனாதி பாலாஜியை ஏற்கனவே செங்கல்பட்டு கொலையில் தொடர்புடைய நபர்கள் பழிக்குப்பழி வாங்குவதற்காக கொலை செய்தார்களா?
அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொடூர கொலை நடந்ததா? என்று விசாரித்து வருகின்றனர்.