
ஈரோடு
ஈரோட்டில், சொத்தைப்பல் வலியால் தீவனமில்லாமல் சோர்ந்து கீழே விழுந்த குட்டி யானையை சோகத்துடன் தாய் யானை சுற்றி சுற்றி வந்து அருகிலேயே நின்றுக் கொண்டிருந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ளது கரளியம் கிராமம். இந்த கிராமத்திலிருந்து உகினியம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் குட்டியானை ஒன்று உடல் சோர்வடைந்த நிலையில் சுற்றித் திரிந்தது.
இதனை பார்த்த மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு உடனே தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு சத்தியமங்கலம் வனச்சரகர் ஜான்சன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் வந்து குட்டியானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால், அந்த குட்டியானை சோர்வடைந்த நிலையில் இருந்ததால் வனப்பகுதிக்கு செல்லாமல் அங்கேயே நின்றது.
இந்த நிலையில் நேற்று காலை கரளியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்ட தோட்டத்தில் குட்டியானை படுத்துக் கிடந்தது. அதனருகே தாய் யானையும் நின்றுகொண்டிருந்தது.
பின்னர், இதுகுறித்து மீண்டும் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கிராம மக்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து தாய் யானையை விரட்ட முயற்சித்தனர். ஆனால், தாய் யானை குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து வனப்பகுதிக்கு செல்லாமல் இருந்தது.
பட்டாசுகளை மூலம் தாய் யானையை விரட்ட 15 முறை வனத்துறையினர் முயற்சி செய்தும் தோட்டத்தில் இருந்து ஒரு அடி கூட நகராமல் தாய் யானை அங்கேயே நின்றது. அப்போதுதான் குட்டியானைக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கும் போலும், அதனால் தான் தாய் யானை விலகாமல் அங்கேயே நிற்கிறது என்பதை வனத்துறையினர் புரிந்து கொண்டனர்.
பின்னர், வனத்துறையினர் குட்டி யானை படுத்திருக்கும் இடத்தின் அருகே நெருப்பு பற்ற வைத்தனர். இதனால் தாய் யானை குட்டி யானையை விட்டு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சென்று, ஒரு வேலி மறைவில் நின்றுகொண்டு இருந்தது. ஆனால், அப்போதும் அந்த தாய் யானை, குட்டியானையை பார்த்தபடியே சோகத்தோடு நின்று கொண்டிருந்தது.
மாலை 4 மணியளவில் வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் சம்பவ இடத்திற்கு வந்து குட்டியானைக்கு சிகிச்சை அளித்தார். முதலில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் ஊசி போடப்பட்டது.
குட்டி யானைக்கு என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு பதிலளித்த கால்நடை மருத்துவர் அசோகன், "4 வயது உடைய இந்த குட்டியானைக்கு சொத்தைப்பல் வலி உள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக தீவனம் உண்ணாமல் இருந்துள்ளது. மேலும் அதற்கு வாய் புண்ணும் உள்ளது. அதனால்தான் உடல் சோர்வடைந்து படுத்துக்கொண்டது" என்று அவர் தெரிவித்தார்.
பின்னர், வனத்துறையினரிடம் கேட்டபோது, "தாய் யானை குட்டியானையை பார்த்துக்கொண்டே இருப்பதால் மக்கள் யாரும் யானை இருக்கும் இடத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இரவு, பகலாக தொடர்ந்து குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
சொத்தப்பல் வலியால் குட்டியானை தீவனமின்றி சோர்ந்து போன நிலையில் தாய் யானை, குட்டி யானையின் அருகேயே நின்றுக் கொண்டு சோகத்துடன், பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் அதனைப் பார்ப்பவர் கண்ணில் நீர் வர வைத்துள்ளது.