கந்து வட்டி கொடுமை... நெல்லையில் மேலும் ஒரு சம்பவம்... இளம் பெண் மருத்துவமனையில்!

First Published Nov 7, 2017, 11:33 AM IST
Highlights
young lady trying to poisoned herself due to debt burden in nellai district


நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது பரும்பு நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபழம் (வயது 29). இவரது கணவர் செல்வம் (34). தங்கபழம்  மகளிர் சுய உதவிக் குழுக்களில் பங்கேற்று வருகிறார். 

இதனிடையே, சுய உதவிக் குழுவுக்காக கடன் தொகை செலுத்த வேண்டிய நிலையில், அந்தப் பகுதியில் கந்து வட்டி கொடுத்து வசூல் செய்து வரும் நபர் ஒருவரிடம் வார வட்டியாக 3 பைசாவுக்கு ரூ. 30 ஆயிரம் வாங்கியிருந்தாராம். சுய உதவிக் குழுவுக்கு செலுத்துவதற்காக வாங்கிய கடனை  சூழ்நிலை காரணமாக அவரால் வட்டியுடன் செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது. இதனால் அவருக்கும் அவர் கணவர் செல்வத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பாக புகார் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும் தெரிவித்திருந்ததால், அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று, நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் நடத்திய மனு நீதி நாள் முகாமுக்குச் சென்று வந்துள்ளார் தங்க பழம். 

இந்நிலையில் இன்று அதிகாலை கணவர் செல்வத்துடன் ஏற்பட்ட தகராறில், உணர்ச்சி வசப்பட்ட தங்க பழம், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் செல்வம் உள்ளிட்ட குடும்பத்தார், தங்கபழத்துக்கு உள்ளூரில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே தங்கபழத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டி  கொடுமை  உள்ளது என்று கூறி, இரு பிஞ்சுக் குழந்தைகள் உள்பட நான்கு பேர் தீக்குளித்து இறந்த பரிதாபச் சம்பவம் நடந்து அதுகுறித்த சோகம் நீங்காத நிலையில், கந்து வட்டி கொடுமை காரணமாக இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு  முயன்றது பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. 

click me!