
திருச்சியில் கடந்த 5 வருடங்களுக்கு முன் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் திமுக., வின் ராமஜெயம். இது வரை குற்றவாளிகள் கண்டறியப் படாததால், மனுதாரர் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கின் விசாரணை நடைபெற்ற போது, இந்த வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி உத்தரவிட்ட நீதிமன்றம், இன்னும் 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திமுக., முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 2012 மார்ச் 23ல் திருச்சி பாலக்கரை பகுதியில் படுகொலை செய்யப்பட்டார் ராமஜெயம். 5 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் இனம் காணப் படாததால், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, ராமஜெயத்தின் மனைவி லதா கடந்த 2014ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இன்று 21 வது முறையாக விசாரணைக்கு வந்தது. ஒவ்வொரு முறையும் இந்த வழக்கில், குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்று கூறியே அவகாசம் கேட்டுக் கொண்டிருந்தது சிபிசிஐடி. மேலும், இந்த வழக்கில் 12 ரகசிய அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இன்றும் இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்றும் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரியது சிபிசிஐடி.,
ஆனால், சிபிசிஐடி க்கு எத்தனை முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய
நீதிபதி பஷீர் அகமது, கூடுதல் கால அவகாசம் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், தங்களுக்கு சிபிசிஐடி மீது நம்பிக்கையில்லை என்றும் கோரிய மனுதாரர் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சிபிஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிபிஐ.,க்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் இதுவரை கண்டறிந்த தகவல்களை சிபிசிஐடியினர் சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.