
உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம், பேனர் மற்றும் கட் அவுட்களில் இடம் பெற உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பேனர்கள், கட் அவுட்களை அகற்றக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ வைக்கக்கூடாது என அண்மையில் உத்தரவிட்டிருந்தது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் இதை உள்ளாட்சி நிர்வாகமும் போலீசாரும் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கும் விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவுக்கு எதிராக மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் செல்வசேகரன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
வழக்கறிஞர் செல்வசேகரன் மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், ஆபாச படங்கள் மட்டுமே பேனர், கட் அவுட்களில் இருக்க கூடாது என்று விதிமுறைகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.