
வேலூர்
வேலூரில் வேளாண்மை இணை இயக்குநர் வாசுதேவ ரெட்டி தலைமையில் உலக மண்வள நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொண்டனர்.
வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் உலக மண்வள நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வாசுதேவ ரெட்டி தலைமைத் தாங்கினார். வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தி. தினகரன், பா. ஸ்ரீதர், உதவிப் பேராசிரியர் தி. பாலாஜி ஆகியோர் பயிர் சாகுபடியில் மண்ணின் முக்கியத்துவம், மண்ணில் சத்து குறைப்பாட்டால் ஏற்படும் பயிர் சேதம், மண்ணின் வளம் காத்தல் ஆகியவை குறித்து விளக்கிப் பேசினர்.
ஸ்பிக் நிறுவனத்தின் மண்டல மேலாளர் வி.எஸ். அருணாசலம் உர மேலாண்மை குறித்தும், விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் சா.ஜோஸ்வா டேவிட்சன் மண்ணில் உள்ள நீரின் அளவை கண்டறியும் கருவி குறித்தும் விளக்கினர்.
மண் மாதிரி சேகரித்தல், தொழு உரம் தயாரித்தல் குறித்து பாலார் வேளாண்மை கல்லூரியின் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியை க. ரேவதி பேசினார்.
அதேபோன்று, அரக்கோணத்தில் நடந்த விழாவிற்கு தலைமை வகித்து, கே.எஸ்.சுதர்சனன் பேசியது:
"தங்க நகைக் கடன், விவசாயம், பயிர் கடன், கறவை மாடு கடன், சொட்டு நீர் பாசன கடன் உள்ளிட்ட வங்கியின் கடன் திட்டங்களை விவசாயிகள் பெற்று, விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.
வறட்சி மற்றும் பல்வேறு காரணங்களால் கடனைத் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் வாராக் கடன் கணக்கில், விதிமுறைக்கேற்ப வட்டி மற்றும் அசல் சலுகையுடன் முடித்துக் கொள்ளும் வகையில் கடன் சமாதான் திட்டம் 2018 ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மண் பரிசோதனை செய்து விவசாய உற்பத்தியை பெருக்குவதோடு, மண் வளத்தையும் பெருக்கிக் கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.