
நாகப்பட்டினம்
பொறையாறு போக்குவரத்து பணிமனை கட்டிடம் இடிந்து உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாவது மாநாடு சமீபத்தில் இரண்டு நாள்கள் நடைப்பெற்றது.
இந்த மாநாட்டில் கட்சியின் வட்டச் செயலாளராக பி.சீனிவாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், 15 பேர் கொண்ட புதிய வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
பின்னர், “பொறையாறு போக்குவரத்து பணிமனைக் கட்டிடம் இடிந்து உயிரிழந்த தொழிலாளர்கள் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.
தரங்கம்பாடி வட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனை கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.