
கோவில்பட்டி,
கோவில்பட்டியில், இலவச வீட்டுமனை பட்டா தராததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைச் செய்யப் போவதாக தொழிலாளி மிரட்டினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அமாவாசை மாரியப்பன் (57), கூலி தொழிலாளி. இவர் புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் கோவில்பட்டி இரயில் நிலையம் எதிரேயுள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கிருந்த சார்பதிவாளர் செல்வகுமாரியிடம், அமாவாசை மாரியப்பன் தனக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உடனே சார்பதிவாளர் செல்வகுமாரி, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில்தான் மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார். உடனே அங்கிருந்து வெளியே வந்த அமாவாசை மாரியப்பன், சார்பதிவாளர் வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார். அவர் செல்போன் கோபுரத்தில் பாதி தூரம் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல்துறை சப்– இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையில் காவலாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் அமாவாசை மாரியப்பனிடம் லாவகமாக பேச்சுக் கொடுத்தவாறே செல்போன் கோபுரத்தின் மீது ஏறினர்.
பின்னர் அமாவாசை மாரியப்பனை பத்திரமாக கீழே அழைத்து வந்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.