
போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, மையத்தின் நிர்வாகிஉள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கே.கே.நகர் அருகே ஜாபர்கான்பேட்டையை மகேஷ் (எ) மாடசாமி (36). கூலித்தொழிலாளி மது போதைக்கு அடிமையானவர். நாளுக்கு நாள் குடிப்பழக்கம் அதிகமானதால் மகேஷை, அவரது உறவினர்கள், போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க முடிவு செய்தனர்.
அதன்படி செங்குன்றம் அடுத்த புழல் அருகே காவாங்கரை மகாவீர் கார்டன் 4வது தெருவில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் மகேஷை கடந்த மாதம் சேர்த்தனர். அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சிகிச்சையும், கவுன்சிலிங்கும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ் மர்மமான முறையில் மறுவாழ்வு மையத்தில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதை வாங்க மறுத்த உறவினர்கள், மகேஷின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (37), அவரது உதவியாளர் வேலூரை சேர்ந்த பெஞ்சமின் பாலச்சந்தர்(28) ஆகியோர் மகேஷை அடித்து கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், சுரேஷ்குமார், உதவியாளர் பெஞ்சமின் பாலச்சந்தர் ஆகியோரை கைது செய்துதனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.