
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 11 கோடியில் தார் சாலை அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாக, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியில் தார் சாலை, பேவர் பிளாக் சாலை மற்றும் மழைநீர்வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிலையில், மாநகராட்சிக்கு உள்பட்ட கணேசன் காலனி, செல்சீனி காலனி, தபால் தந்தி காலனி மற்றும் கிருஷ்ணராஜாபுரம் ஆகிய இடங்களில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ்,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், அதிமுக நிர்வாகிகள் ஏ. முருகன், பிஎன். ராமகிருஷ்ணன், ஜீவா பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர்களிடம், "தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உள்பட்ட 25 வார்டுகளில் 27 பணிகளான தார்ச்சாலை, பேவர் பிளாக் சாலை மற்றும் மழைநீர்வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் ரூ.11 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த வார்டு எண்கள் 2, 3, 4, 5, 10, 11, 18 மற்றும் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த வார்டு எண்கள் 15, 22, 23, 24, 25, 31, 33 மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த வார்டு எண்கள் 48, 50, 51, 52, 54, 55 ஆகியவற்றில் பணிகள் மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்பட உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.