
தமிழகத்தில், முதன் முதலாக, மகளிர் காவல் நிலையங்களை தோற்றுவித்து, வாழ்வு தந்த ஜெயலலிதாவுக்கு, பெண் போலீசார் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். எங்களுக்கு வாழ்வு தந்தவரே இல்லாதபோது, இந்த போலீஸ் வேலை எதற்கு என அவர்கள் பணியை புறக்கணிக்கின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு, கடந்த 6ம் தேதி ராஜாஜி அரங்கில், லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஜெயலலிதாவின் உடல் அருகே செல்ல முடியாமல், நின்ற இடத்திலேயே கண்களை மூடி அஞ்சலி செலுத்தினர்.
காவல் நிலையங்களில் இருந்த பெண் போலீசார், அடக்கம் செய்த நேரத்தில், எழுந்து நின்று, மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து, பெண் போலீசார் கூறுகையில், 1992ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், மகளிருக்கு வாய்ப்பு தரும் வகையில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அனைத்து மகளிர் காவல் நிலையங்களை துவக்கி வைத்து, எங்களுக்கு வாழ்வு கொடுத்தார். இபபோது, 200 காவல் நிலையங்களிலும், பல ஆயிரம் பெண் போலீசார் வேலை பார்க்கிறோம்.
எங்களுக்கு அவர் செய்த சலுகைகள் ஏராளம். ஆண்கள் மட்டுமே, கோலோச்சி வந்த காவல்துறையில், மிக முக்கிய முடிவுகள் எடுக்கும் பதவிகளில், பெண் அதிகாரிகளை அமர வைத்து அழகு பார்த்தார்.
அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பு; பணிச்சுமையால், அவரது உடல் அருகே செல்ல முடியவில்லை. இதனால், பணியில், இருந்த இடத்தில் இருந்தே, முதல்வருக்கு அஞ்சலி செலுத்தினோம்
எங்களுக்கு தந்தவரே இல்லாதபோது, இந்த போலீஸ் வேலை எங்களுக்கு எதற்கு என மனதில் தோன்றுகிறது என கண்ணீருடன் கூறினர்.