
சேலம்
சலகண்டாபுரம் அருகே இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை மூடச்சொல்லி பெண்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஒருவாரம் அவகாசம் கேட்டு தாசில்தார் சமாதானப் படுத்தினார்.
சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் அருகே செலவடை கிராமத்தில் உள்ளது செலவடைமேடு. இந்த இடத்தில் இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி மூடக்கோரி அந்த பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனால், அந்த சாராயக் கடை தொடர்ந்து செயல்பட்டதால் நேற்று காலை 11 மணியளவில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் அந்தக் கடைக்கு முன் திரண்டனர்.
பின்னர், அவர்கள் சாராயக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். கடை முன்பு அந்த பகுதி ஆண்கள் பலர், பெண்களின் பாதுகாப்புக்காக திரண்டு நின்றனர்.
“உச்சநீதிமன்ற உத்தரவுபடி இந்த மதுக்கடையை மூட வேண்டும்” என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் தாரமங்கலம் காவல் ஆய்வாளர் குமரன், சலகண்டாபுரம் காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையில் ஏராளமான காவலாளர்கள் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் பற்றி அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு (ஓமலூர்), கண்ணையன் (தாரமங்கலம்) ஆகியோரும் அங்கு வந்து சாராயக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தி மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், தகவலறிந்து வந்த ஓமலூர் தாசில்தார் ராஜேந்திரன் மக்களிடமும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் சாராயக் கடையின் அருகில் ‘பார்’ செயல்படக் கூடாது.
சந்துக் கடை வைத்து இரவு 10 மணிக்கு மேல் சாராயம் விற்கக்கூடாது.
சாராயக் கடையை விரைவில் மூடவேண்டும் என்று மக்கள் கட்டளையிட்டனர்.
இதனையடுத்து ஒரு வாரத்தில் கடையை மூடி வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறேன் என்று தாசில்தார் உறுதி அளித்தார்.
இதில் சமாதானம் அடைந்த பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர். ஆனால், ஒருவாரம் காத்திருக்க முடியாது என்றும், கடையை உடனே மூட வேண்டும் என்றும் தாசில்தார் ராஜேந்திரன் புறப்படும் முன்பு சாராயக்கடை அருகே உள்ள தாரமங்கலம், சலகண்டாபுரம் சாலையில் அந்த பகுதி ஆண்கள் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களிடம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, கண்ணையன் ஆகியோர், தாசில்தார் ஒரு வாரத்துக்குள் இந்த கடையை மூடி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே, மறியலை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையேற்று அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.