
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது பெண்கள் சிலர் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே தருமத்துப்பட்டி சுரைக்காய்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சிறிய குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வறட்சியால் ஆழ்துளை கிணற்றில் குறைந்தளவே தண்ணீர் இருக்கிறது.
இந்த தண்ணீர் அந்தப் பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர், டி.கோம்பையில் உள்ள குளத்தில் கிணறு வெட்டப்பட்டு அப்பகுதிக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து டி.கோம்பையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால், தரமற்ற குழாய்கள் பதித்ததாக மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200–க்கும் மேற்பட்டோர் செம்பட்டி – ஒட்டன்சத்திரம் சாலையில் திடீரென வெற்றுக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில பெண்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளார் ஆறுமுகம், கன்னிவாடி காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி ஆகியோர் தலைமையில் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் தலைமையிலான அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
"பதிக்கப்பட்ட குழாய்களை எடுத்துவிட்டு புதிய குழாய்கள் பதித்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.