ஸ்டாலின் அண்ணா.. நீங்களும் இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறீர்களே.. கதறும் அபுதாஹிர் தங்கச்சி!!

By Narendran SFirst Published Nov 27, 2021, 4:40 PM IST
Highlights

பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய கோரி கோவையில் பெண்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய கோரி கோவையில் பெண்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சிறைகளில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான கைதிகள் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு நன்னடத்தை காரணமாகவும் அண்ணா பிறந்தநாளையொட்டியும் பல்வேறு சிறைகளில் உள்ள ஏராளமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் கோவை மத்திய சிறையில் இருந்து 99 கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது 24 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பது தங்கள் குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்டாலின் அண்ணா என்று பேச தொடங்கிய அபுதாஹிர் தங்கை, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது அவர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது உங்களுடைய ஆட்சி தனியாட்சி. நீங்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. அப்படி இருக்கையில் எங்களது சகோதரர்களை ஏன் விடுதலை செய்யாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். உங்களது காரணம் சரியாக இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறிய அபுதாஹிர் தங்கை, இல்லையெனில் சிறையில் இருக்கும் தங்கள் சகோதரர்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று தெரிவித்தார்.

 

25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தனது சகோதரர் அபுதாஹிருக்கு மதுரை நீதிமன்றம் விடுதலை அளித்து உத்தரவிட்ட போதும் அவரை விடுதலை செய்யாமல் சிறையில் வைத்து வதைக்கிறீர்கள் என்றும் அதற்கான காரணத்தை கூறுங்கள் என்றும் கதறினார். எங்களது ஓட்டுகள் தேவைபடுகிறது ஆனால் நாங்கள் தேவையில்லை எனில் நாங்கள் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்றும் எங்களுக்கு ரேசன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் ஆகியவை வேண்டாம் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய கோரி சாலையில் அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!