Tamilnadu Rain : உஷார்… 10 மாவட்டங்களில் கொட்டபோகிறது கனமழை… எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

By Narendran SFirst Published Nov 27, 2021, 3:22 PM IST
Highlights

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தென்காசி, கடலூர், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், செங்கல்பட்டு, செய்யூர் பகுதிகளில் தலா 18 செ.மீ., காஞ்சிபரம் மாவட்டம் கட்டப்பாக்கத்தில் 17 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குனறத்தில் 16 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

நவம்பர் 27, 28 ஆம் தேதிகளில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். வரும் நவம்பர் 29 ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, நவம்பர் 29, 30 ஆம் தேதிகளில் அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 1 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

click me!