
சென்னை, தலைமைச் செயலகம் முன்பு திருவெற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று தொடங்கியது. இன்று பேரவையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தங்கம் தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வுக்குப் பின்னர், ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் பண பட்டுவாடா தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினார். இதற்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்து விட்டார். இதனை அடுத்து, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தலைமை செயலகம் முன்பு திருவெற்றியூர் குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குப்பம் பகுதி வழியாக கச்சா எண்ணெய் குழாய்கள் அமைக்கக்கூடாது என்று அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில் மனு அளிக்க வந்தனர். பின்னர், மனுவினை அளித்த அவர்கள், திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியபோது, சுனாமி, வர்தா புயலின்போது ஏற்பட்ட சேதங்களுக்கு அரசிடம் இருந்து எங்களுக்கு உரிய நிவாரணத் தொகை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
தங்களுக்கு அரசு அளித்த நிவாரணத் தொகையும் முன்னாள் எம்.எல்.ஏ. சரிவர எங்களிடம் கொடுக்கவில்லை என்றும் அப்போது அவர்க கூறினர்.
மீனவ குப்பங்கள் வழியாக புதியதாக கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் பணியினை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது என்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கலைந்து போகச் சொல்லிதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.