
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களைத் தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள 1000 ற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சாமளாபுரத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது ஏடிஎஸ்பி பாண்டியராஜன் உள்ளிட்ட போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு காதில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது காதில் இருந்து ரத்தம் வழிவதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஏடிஎஸ்பி பாண்டியராஜனை கைது செய்ய வேண்டும் என்றும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன,
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து அப்பகுதிக்கு ஏராளமான பெண்கள் வந்த வண்ணம் இருப்பதால், அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
அதே நேரத்தில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வருபவர்களை காவல் துறையினர் தடுத்து வருகின்றனர்.