
நாமக்கல்
நாமக்கல்லில், "எங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்" என ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை முஹமதிய்யா ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகள், மக்கள் என திரளானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “பாப்பம்பாளையம் கிராம ஊராட்சிக்குள்பட்ட கொக்கராயன்பேட்டை பாரதி நகர், பாத்திமா நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தற்போது பாரதி நகரில் புதிதாக ஒரு டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதற்கு ஆரம்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டாஸ்மாக் சாரயாக் கடை அமைக்கப்படவுள்ள பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள், அம்மன் கோயில், அங்கன்வாடி மையம், இஸ்லாமிய பெண்களுக்கான மதரஸா அமைந்துள்ளன.
இங்கு சிலர் ஆற்றங்கரை ஓரங்களில் சாராயம் குடித்துவிட்டு பல்வேறு இழிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவையனைத்தும் சட்டத்திற்கு புறம்பானது.
இந்த நிலையில், டாஸ்மாக் சாராயக் கடை எங்கள் குடியிருப்புப் பகுதியிலேயே அமைந்தால் குற்றச் செயல்கள் பெருகும். எனவே, எங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அன்த மனுவில் கூறப்பட்டுள்ளது.