
பெரம்பலூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பிணியான சிறுமிக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரம்பலூர் அருகே எளம்பலுர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியை சேர்ந்த ஒருவரால் கற்பழிக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தை, தான் சிறு விவசாயி என்றும், மழையின்மையால் விவசாயம் செய்ய இயலாமலும், எந்த வருமானமும் இன்றியும் சிரமப்படுவதால், கர்ப்பிணியான தனது மகளுக்கு சத்தான உணவு, மருத்துவம் ஆகியவற்றைத் தன்னால் வழங்க முடியவில்லை. எனவே, தனது மகளுக்கு இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென கோரி, மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இதைப் பரிசீலித்த பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி, பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தையைப் பாதுகாத்தல் விதிகளின் கீழ், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 ஆயிரம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நேற்று உத்தரவுப் பிறப்பித்தது.