
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில் புதிதாக மதுக்கடை தொடங்கியதைக் கண்டித்து பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டோர் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து அக்கடையை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசாருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல பெண்கள் படுகாயமடைந்தனர்.இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது. விடிய விடிய பொது மக்களும்,பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்வரண் குமார், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுக்கடை மூடப்படும் என்றும், தாக்குதல் நடத்திய அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.