
இராமநாதபுரம்
ஏர்வாடி கடற்கரையில் பாறையில் மோதி இறந்த அபூர்வ பச்சை ஆமை கரை ஒதுங்கியது.
இராமநாதபுரம் ஏர்வாடி அருகே உள்ளது சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதி. இங்கு நேற்று காலை ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இதனை, கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் பார்த்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் வனக் காப்பாளர் பாரதி, வனகாவலர் சந்திரசேகர் ஆகியோர் நிகழ்விடத்திற்குச் சென்றனர். அங்கு, இறந்து கரை ஒதுங்கியது “பேராமை” என்ற வகையைச் சேர்ந்த அரிதான பச்சை ஆமை என்பதை கண்டறிந்தனர். ஆண் இனத்தைச் சேர்ந்த இந்த பச்சை ஆமை சுமார் 120 கிலோ எடை இருந்தது. வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் காயங்கள் ஏற்பட்டு முகம் சிதைந்திருந்தது.
அப்போது, வனத்துறையினர் தெரிவித்தது:
“தூத்துக்குடி – இராமேசுவரம் இடைப்பட்ட கடல் பகுதியில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், கடல் பரப்பில் நீந்தி செல்லும் கடல்வாழ் உயிரிழனங்கள் காற்றின் வேகத்தால் இழுத்துச் செல்லப்பட்டு பாறை உள்ளிட்டவைகளில் மோதி வருகின்றன.
இவ்வாறு அந்த ஆமையும் காற்றின் வேகத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு பாறையில் மோதி அடிபட்டு காயம் அடைந்திருக்கலாம். மேலும், ஆமை கடலில் படகுகளின் மீது மோதியதால் அதன் ஓடு பகுதி சேதமடைந்து இருக்கும். இந்த ஆமை இறந்து 2 வாரங்கள் கழித்து கரை ஒதுங்கியிருக்கலாம்” வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஏர்வாடி கால்நடை மருத்துவர் கடற்கரைக்கு வந்து, அந்த இடத்திலேயே இறந்த ஆமையை உடற்கூறாய்வு செய்தார். அதன் பின்னர் ஆமை அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது.
ஏர்வாடி மற்றும் கீழக்கரைக் கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாள்களாக அரிதான கடல் ஆமைகள் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.