Women Marriage Age : பெண்ணின் திருமண வயது 21 ஆக அதிகரிப்பு.. ஆதரவும் கோரிக்கையும்.. ராமதாஸ் ட்வீட்

Published : Dec 16, 2021, 07:52 PM ISTUpdated : Dec 16, 2021, 07:56 PM IST
Women Marriage Age : பெண்ணின் திருமண வயது 21 ஆக அதிகரிப்பு.. ஆதரவும் கோரிக்கையும்.. ராமதாஸ் ட்வீட்

சுருக்கம்

பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கும் நிலையில், அதை மேலும் மூன்று ஆண்டுகள் உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் விரைவிலேயே இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் குழந்தை திருமண தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்து திருமணச் சட்டம், மற்றும் சிறப்பு திருமணம் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்திருந்தது. ஜெயா ஜெட்லி தலைமையில், நிதி ஆயோக் உறுப்பினர் வீ.கே. பால் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் சட்டத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றனர். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி இது நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்தப் புரட்சிகர முடிவு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார்.உலக அளவில் இந்தியப் பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும் தான் காரணம் ஆகும் என்று தெரிவித்த அவர், பெண்கள் திருமணம் குறித்து முடிவெடுக்கும் பக்குவத்தை அடைய 21 வயது நிறைவடைய வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக பாமக வலியுறுத்தி வந்தது. கர்நாடக உயர் நீதிமன்றமும் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தப் பரிந்துரை அளித்திருந்தது. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பதை பிரதமரும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தார். இப்போது சட்டமே தயாராகி விட்டது. இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டால் அது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும்" என்று  தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?