
நாமக்கல்
தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணின் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், கழுத்து திருகப்பட்ட நிலையில் ஆடுகள் கொல்லப்பட்டும் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் அருகே உள்ளது நல்லிக்கௌண்டன்புதூர். இங்கு சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பாலத்தின் கீழ் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு கை மற்றும் இரண்டு கால்கள் சாக்கு பையில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.
இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து நல்லிப்பாளையம் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளார் தங்கவேல் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், துண்டு துண்டாக கிடந்த கை மற்றும் கால்களை மீட்டு உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் உடலின் மற்ற பாகங்கள் மற்றும் தலை கிடக்கிறதா? என்று பலக் குழுக்களாக பிரிந்து காவலாளர்கள் தேடிப் பார்த்தனர்.
அப்போது, அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கழுத்து திருகப்பட்டு, இறந்த நிலையில் மூன்று ஆடுகள் கிடந்ததையும் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த ஆடுகளையும் காவலாளர்கள் மீட்டு உடற்கூராய்வுக்காக லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
காவலாளர்களின் முதற்கட்ட விசாரணையில், துண்டு துண்டாக கிடந்த கை, கால்கள் 30 முதல் 35 வயதுடைய பெண்ணுடையதாக இருக்கலாம் என்பது தெரிந்தது. அந்தப் பெண்ணை பயங்கரமாக வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்றும், பின்னர் அவரது உடலை நீரில் வைத்து பதப்படுத்தி, கொலை செய்தவர்கள் துண்டு துண்டாக வெட்டி இங்கே வீசிச்சென்று இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக காவலாளர்கள் தெரிவித்தனர்.
பெண்ணின் கை, கால்கள் கிடந்த இடத்தின் அருகே ஆடுகள் இறந்து கிடந்ததால் நரபலிக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? போன்ற கோணங்களிலும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலையில் துப்பு துலக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனோடு அருகில் உள்ள பிற மாவட்ட காவல் நிலையத்திற்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.