
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் எரிவாயு குழாய் பதிக்க நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் வந்த கெயில் நிறுவனத்தை குழாய் பதிக்க விடாமல் தடுத்த எட்டு பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கோட்டூர் அருகே நல்லூரில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திலிருந்து எடுக்கப்படும் எரிவாயு, குழாய் மூலம் மன்னார்குடியை அடுத்துள்ள திருமக்கோட்டை மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.
இதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பதித்த குழாய்களின் உறுதித் தன்மை குறைந்திருக்கும் என்பதால், புதிய குழாய் பதிக்கும் பணி கடந்த 2016-ஆம் ஆண்டு கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்ட நிலையில் திருமக்கோட்டை அருகேயுள்ள கோவில்நத்தம் கிராமத்தில் புதிய குழாய் பதிக்கும் பணியைத் தொடங்க வியாழக்கிழமை (பிப்ரவரி 8) வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 9) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் நடராஜன் (மன்னார்குடி), இனிக்கோ திவ்யன் (முத்துப்பேட்டை) மற்றும் ஐந்து காவல் ஆய்வாளர்கள், ஒன்பது சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்புடன், கெயில் நிறுவன பொதுமேலாளர் மருதுபாண்டியன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டவர்கள், எரிவாயு குழாய் அமைக்கும் பணியைத் தொடங்க முயன்றனர்.
அப்போது அங்கு வந்த கோவில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்களுடன் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வே.வெங்கடேசன் (18), பா. அஜித்குமார் (22), மு.சசிக்குமார் (22), ச.விமல்ராஜ் (17), சி.சூரியா (17), ந.திவாகர் (22), சுப்பிரமணியன் (50), வேதசெல்வம் (48) ஆகிய எட்டு பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காவல்துறையினர், கெயில் அலுவலர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்ட எட்டு பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தங்களுக்குச் சொந்தமான இடத்தின் வழியாக எரிவாயு குழாய் அமைத்துக்கொள்ள அனுமதி தந்தவர்களின் இடத்தில் குழாய் அமைக்கும் பணியை காவல் பாதுகாப்புடன் கெயில் நிறுவனத்தினர் தொடங்கினர்.