பெண்கள், குழந்தைகள் மீதான வழக்குகளை துரிதமாக முடித்து நீதி கிடைக்க வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும் – தலைமை நீதிபதி

Asianet News Tamil  
Published : Jun 05, 2017, 07:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
பெண்கள், குழந்தைகள் மீதான வழக்குகளை துரிதமாக முடித்து நீதி கிடைக்க வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும் – தலைமை நீதிபதி

சுருக்கம்

Women and children should get the justice soon - Chief Justice

சேலம்

சமூகத்தில் பெண்கள், குழந்தைகளின் மீதான வழக்குகளை வழக்கறிஞர்கள் துரிதமாக முடித்து நீதி கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 98 வழக்கறிஞர்கள் அறைகள், வழக்கறிஞர்களுக்கான கூட்டரங்கம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.8.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 30 வழக்கறிஞர்கள் அறைகள், கூட்டரங்கம் மற்றும் உணவுக்கூடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளுக்கான நில வழிபாடு மற்றும் அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவில் சென்னை உயர்நீத்மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கட்டுமானப் பணிகளை நிலவழிபாடு செய்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன், கே.கலையரசன், ஆர்.சுப்பிரமணியன், சேஷசாயி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியது:

மக்களாட்சியின் நான்கு தூண்களில் ஒன்றாக நீதித்துறை விளங்குகிறது. நீதித்துறை சமூகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாக நீதித்துறைக்காக பங்காற்றியவர்களில் சேலத்தை சேர்ந்த ராஜாஜி சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் அவர் பணியாற்றியதை மற்ற வக்கீல்கள் பெருமையாக கருத வேண்டும்.

மூத்த வழக்கறிஞர்கள், நீதித்துறையில் பணியாற்றிய முன்னோர்கள் சமூகத்திற்கு எத்தகைய வகையில் நன்மை கிடைத்திட உழைத்தார்களோ அதனை பின்பற்றி தற்போது உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

வழக்கறிஞர்களின் வாதத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் அளிக்கப்படுவதால், மக்களுக்கு விரைவான நீதி கிடைக்க நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

வாதத்திற்கு வழக்கறிஞர்கள் வரும்பொழுது, அந்த வழக்கின் பின்புலத்தை முழுமையாக அறிந்து வர வேண்டும்.

சமூகத்தில் காலமாற்றத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீதிமன்ற அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. நீதிமன்றங்கள் சரியான நீதியை வழங்கிடும் என்பதை மக்களுக்கு உணர்த்திட வேண்டும்.

வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் சேவை மனப்பான்மையோடு பணியாற்றி தீர்ப்பு வழங்கும் முனைப்போடு செயல்பட வேண்டும். இதில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் சரிசமமான பங்கு உள்ளது. இதை உணர்ந்து நீதிமன்ற நடவடிக்கைக்கு, வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்.

சட்ட உதவி மையங்களில் ஏழை மக்களின் வழக்குகளை வழக்கறிஞர்கள் எடுத்து அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். போதிய கட்டணம் இல்லாத பட்சத்திலும், உதவும் மனப்பான்மையிலும் வழக்கை ஏற்க வேண்டும்.

சமூகத்தில் பெண்கள், குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை வழக்கறிஞர்கள் துரிதமாக முடித்து நீதி கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சம்பத், மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், சேலம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, செயலாளர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவின் இறுதியில் தலைமை குற்றவியல் நீதிபதி அன்புச்செல்வி நன்றித் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!