பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற சென்ற பாட்டியும் தீயில் கருகி பரிதாபமாக இறப்பு...

First Published May 9, 2018, 6:58 AM IST
Highlights
woman committed suicide grand mother who went to save she also Dead


ஈரோடு 

ஈரோட்டில் குடும்ப தகராறில் மனவேதனை அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற சென்ற பாட்டியும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் காஜா மைதீன். இவருடைய மனைவி ஜெமினா (25). இவர்களுக்கு ஆதில் (7) என்ற மகன் உள்ளார். 

காஜா மைதீன் திருப்பூரில் உள்ள ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வருவதால் அவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி இருந்தார்.

காஜாமைதீனுக்கும், ஜெமினாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜெமினா கோபித்துக்கொண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்தார். அங்கு ஜெமினாவை கணவருடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் உறவினர்களும் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் ஜெமினா ஈரோடு இந்திராநகர் கோட்டையார் வீதியில் உள்ள அவருடைய பாட்டி சபுரா (70) வீட்டிற்குச் சென்றார். அப்போது அவரிடம், கணவருடன் சேர்ந்து வாழ வேண்டியதுதானே என்று சபுரா கூறியுள்ளார். மேலும், குடும்ப பிரச்சனை குறித்து அவர்கள் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

அப்போது மனவேதனையுடன் காணப்பட்ட ஜெமினா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்த ஜெமீனா, வீட்டின் முன்பு மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். 

அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சபுரா வெளியே ஓடி வந்தார். அப்போது ஜெமினாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அவர் அணைக்க முயன்றார். இதில் சபுராவின் உடலிலும் தீ பரவியது. எனவே தீயில் பேத்தியும், பாட்டியும் கருகினார்கள். 

இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெமினாவும், சபுராவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!