
பெரம்பலூரில் ஆவிகளுடன் பேசும் சக்திகளைப் பெறுவதற்காக உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை வைத்து பூஜை நடத்திய பலே மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாப்பூர் சுடுகாட்டில் இருந்து 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பிணம் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெரம்பலூரில் உள்ள எம்.எம். நகரில் வசித்து வந்தவர் கார்த்திகேயன்(வயது31) இவரது மனைவி நசீமா(21). தம்பதிகளான இவர்களின் நடவடிக்கைகளில் அண்டை வீட்டார்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இரவு நேரத்தில் கார்த்திகேயன் வீட்டில் இருந்து விநோத சத்தம் வருவதை அடுத்து போலீசாருக்கு சுற்றத்தார் தகவல் அளித்தனர்.
இதன் பேரில் அங்குவந்த காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது மூலையில் இருந்த மரப்பெட்டி மீது அதிகாரிகளுக்கு பொறி தட்டியது.அதனை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில் பெண் பிணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அம்பலமானது அந்த அதிர்ச்சித் தகவல்...
பகலில் இயல்பான தம்பதிகளைப் போல வெளி உலகிற்கு காட்டி வந்த கார்த்திகேயன் மற்றும் நசீமா ஆகியோர், இரவானதும் பிணத்தை வைத்து ஆவிகளுடன் பேசும் சக்திகளைப் பெறுவதற்காக அகோரி பூஜை நடத்தி வந்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கைப்பற்றப்பட்ட பிணம் நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரிக்க, 5 ஆயிரம் ரூபாய்க்கு மயிலாப்பூர் சுடுகாட்டில் இருந்து வாங்கியது என அத்தனையும் ஒன்னு விடாமல் ஒப்பித்திருக்கிறார் கார்த்திகேயன்...
இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுடுகாட்டிற்கு விரைந்த பெரம்பலூர் காவல்துறையினர் அங்கு பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரிக்கையில் அந்தப் பெண் பிணம் யாருடையது என்பதற்கான பதில் கிடைத்தது.
அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணையில் சுடுகாட்டு ஊழியர்கள் அளித்த வாக்குமூலங்களின் முழு விவரங்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூரைச் சேர்ந்த கார்த்திகேயன், என்பவர் தம்மை மந்திரவாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது அகோரி பூஜைக்காக இளம் பெண்ணின் உடல் தேவைப்படுவாதகவும் அதற்காக 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், ஆசை வார்த்தை கூறினார்.
சரி பிணம் தானே! யாருக்குத்? தெரியப் போகிறது என்று எண்ணி 20 வயதில் தற்கொலை செய்து கொண்ட அபிராமி என்ற பெண்ணின் உடலை நள்ளிரவில் தோண்டி கார்த்திகேயனிடம் ஒப்படைத்தோம்.. மந்திரவாதியிடம் அளிக்கப்பட்ட பிணம் மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மூத்த மகள் அபிராமியினுடையது" என்று தெரிவித்தனர்.
யார் இந்த அபிராமி?
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மூத்த மகள் அபிராமி. தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரிவர படிக்காததால் அபிராமியை பெற்றோர்கள் திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அபிராமியின் உடல் மயிலாப்பூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட அபிராமியின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இன்று(ஞாயிறு) மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படவுள்ளது.
பிணத்தை வைத்து பூஜை செய்த கார்த்திகேயன் மற்றும் நசீமா தம்பதியினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
பணத்திற்காக புதைக்கப்பட்ட பிணத்தை விற்ற சுடுகாட்டு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.