
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் சாந்தன்,முருகன்,பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.
கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பேரறிவாளனை பரோலில் விடுவிக்க ஜெயலலிதாவே முடிவு செய்தது ஒரு காலம். ஆனால் இன்று அவருடைய அரசு என்று கூறி கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் அவரது பரோலை நிராகரித்துள்ளனர் என்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.
இந்நிலையில், சென்னை எழும்பூரிலுள்ள சிறைத்துறை தலைமை அலுவலத்தில் பரோல் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்த அற்புதம்மாள்செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேரறிவாளன் பரோல் தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அலுவலத்தில் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இன்று காலை முதலமைச்சரை சந்திக்க சென்றதாகவும், அவர் மானிய கோரிக்கை தொடர்பாக சென்றதால் மாலை சந்திக்க வருமாறு கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாதாக சிறைத்துறை அமைச்சரை சந்தித்து விளக்கமளித்ததாகவும், எங்கள் தரப்பு நியாங்களை புரிந்து கொண்டு ஒரு வாரத்தில் பரோல் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நன் நடத்தை விதிகளின் படி விடுதலை செய்திருந்தால் எப்போதோ விடுதலை செய்திருக்கலாம் எனவும் அற்புதம்மாள் குறிப்பிட்டார்.