
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரின் தனிப்பரிவு அலுவலகத்தில் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை ஆமை வேகத்தில் நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
தனிப்பிரிவு தொடக்கம்
பொதுமக்கள் முதல்வரே நேரடியாகச் சந்தித்து குறைகளை கூற இயலாததால், அவரின் நேரடி தனிப்பிரிவு அலுவலகம் மூலம் மனுக்கள் அளித்து நிவாரணம் பெற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனிப்பிரிவு சேவை தொடங்கப்பட்டது.
நம்பிக்கை
இங்கு அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை கடந்த காலங்களில் எடுக்கப்பட்டதால், மக்கள் இந்த தனிப்பிரிவு அலுவலகம் மீது அளவு நம்பிக்கை வைத்து இருந்தனர்.
100சதவீதம் நடவடிக்கை
அதிலும் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் மக்கள் நேரடியாக அளிக்கும் மனுக்கள், மின்அஞ்சல் மூலம், பதிவு தபால் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் மீது 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனால், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கு வந்து சென்று குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுச் சென்றனர்.
ஜனவரி முதல் மோசம்....
ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து முதல்வரின் தனிப்பிரிவு என்பது, தூங்கி வழியும் இடமாக மாறியுள்ளது. மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் முறையாக பரிசீலிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
மக்கள் ஏமாற்றம்
தங்களின் குறைகளுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி வரும் மக்களுக்கு முதல்வரின் தனிப்பரிவு அலுவலகம் முறையான பதில் அளிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், விரக்தியில் இருக்கிறார்கள்.
99 சதவீதம் தீர்வு
இது குறித்து அரசின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2016ம் ஆண்டு(ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது) முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு 3 லட்சத்து 84 ஆயிரதது 762 மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்கள் கடிதங்களாக, நேரடியாகவும், மின் அஞ்சல்கள் மூலம் வந்துள்ளன. இந்த மனுக்களில் 3 லட்சத்து 84ஆயிரத்து 478 மனுக்களுக்கு பதில் அனுப்பப்பட்டு, குறைகள் தீர்க்கப்பட்டுவிட்டன. 284 மனுக்கள் மட்டும் தீர்வு காணப்படவில்லை. ஏறக்குறைய 99.93 சதவீதம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
25 ஆயிரம் மனுக்கள் கிடப்பு
அதேசமயம், கடந்த ஜனவரி 1ந் தேதியில் இருந்து முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு 93 ஆயிரத்து 49 மனுக்கள் புகார் மனுக்கள் வந்துள்ளன. அதில் 67 ஆயிரத்து 812 மனுக்கள் மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன. மீதம் 25 ஆயிரத்து 237மனுக்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
அரசின் இந்த புள்ளிவிவரங்களில் இருந்தே முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் ‘எவ்வளவு வேகமாக செயல்படுகிறது’ என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதிகாரிகள் மெத்தனம்
முதல்வரின் தனிப்பரிவு அலுவலகத்தின் இலவச தொலைபேசி எண்ணான ‘1100’ எண்ணுக்கும், cmcell.tn.gov.in/index.php,cmcell@tn.gov.in ஆகிய எண்ணுக்கும், மின் அஞ்சலுக்கும் மக்கள் குறைகளை தெரிவித்தால் வேகமாக நடவடிக்ைகஎடுக்கப்படும், குறைகள் பதிவு செய்யப்படும் என்று நம்பி இருந்தனர். ஆனால், இப்போது பதிவு செய்யப்பட்ட குறைகள் மீது கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாமதித்து வருகின்றனர்.
ஜெ.. இருக்கும்போது...
இது குறித்து சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரிஅருணாச்சலம் கூறுகையில், “ நான் கொடுத்த எந்த மனுவுக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே முதல்வர் தனிப்பிரிவுக்கு குறைகளை அனுப்புவதை நிறுத்திவிட்டேன். கடந்த ஆண்டு டிசம்பர் வரை முதல்வர் தனிப்பிரிவு சிறப்பாகச் செயல்பட்டது. இந்த ஆண்டு 40 புகார்கள் வரை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.
உணர்வற்ற செயல்பாடு
சமூக ஆர்வலர் வி. சந்தானம் கூறுகையில், “முதல்வரின் தனிப்பிரிவு இப்போது உணர்வற்று பிணமாகக் கிடக்கிறது. நான் பல முறை இந்த பிரிவுக்கு புகார் மனு அனுப்பியும் நிவாரணம் இல்லை, நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.
சரியாகச் செயல்படுகிறோம்
இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகளைக் கேட்டபோது, “ நாங்கள் 100 சதவீதம் புகார் மனுக்களுக்கு தீர்வு காண்கிறோம். இப்போது நிலுவையில் இருப்பது எல்லாம், நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்கள்தான். இவை நீதிமன்றம் மூலமே தீர்வு காணப்பட வேண்டும்’’ என்றனர்.
எப்படியோ.... ஜெயலலிதா மறைவுக்கு முன் சிறப்பாகச் செயல்பட்ட முதல்வரின் தனிப்பிரிவு, அவர் மறைவுக்குபின் மக்களுக்கு சேவைசெய்யவும் மறந்துவிட்டது என மக்கள் புலம்புகிறார்கள்.