
”சுயநல ஆணவ அதிகார வர்க்கமே…!!! இனி கட்டுப்பாடை பற்றியும் கண்ணியத்தை பற்றியும் பேச உமக்கு இனி தகுதியில்லை” என குட்கா விவகாரத்தில் சிக்கிய காவல் மேலதிகாரிகளை கண்டித்து காவலர்கள் ஃபேஸ்புக்கில் சூளுரைத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காவலர் பணியில் காலிபணியிடங்கள் அதிகமாக உள்ளதாகவும், நிரப்பப்படாமல் இழுக்கடிக்கபட்டு வருவதாகவும்,சமூக வலைதளங்களில் உள்ள காவலர்கள் வெளிப்படையாக கூறி வந்தனர்.
இதையறிந்த டிஜிபி ஜார்ஜ் காவலர்கள் புகார்களுக்கு என்று ஒரு புகார் முறை ஒன்றை கொண்டு வந்தார். அதில் காவலர்களின் புகார்களை மெயில் மூலம் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், குட்கா பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விவகாரத்தில் குட்கா நிறுவன உரிமையாளர்களிடம் சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் விஜயபாஸ்கர் ,டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ,தீயணைப்புத்துறை டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்டோர் பணம் பெற்றதாக விபரங்கள் வெளியானது.
இத்தகைய செய்தி ஊடகங்களில் வெளியானதில் இருந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதை தொடர்ந்து வலைதளங்களில் உள்ள காவலர்கள் லஞ்சம் பெற்ற மேலதிகாரிகளை கண்டித்து பதிவுகளைவெளியிட்டு வருகின்றனர்.
அதில், சுயநல ஆணவ அதிகார வர்க்கமே…!!! இனி கட்டுப்பாடை பற்றியும் கண்ணியத்தை பற்றியும் பேச உமக்கு இனி தகுதியில்லை என தெரிவித்துள்ளனர்.
ஜீலை 6 ம் தேதி ஒன்று கூடுவதாகவும், மண்டியிடாத மானம். வீழ்ந்து விடாத வீரம். முடிந்தால் தடுத்து கொள்ளவும். என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
சில அதிகாரிகளை பற்றிய விவரங்கள், பெற்ற லஞ்சங்கள், சோ்த்த பினாமி சொத்துக்களை புள்ளி விவரத்துடன் தயார் செய்து வருவதாகவும், விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உத்தம புத்திரா்கள் போல் தம்மை வெளிகாட்டி வந்தவர் டிஜிபி ஜார்ஜ் என்றும், தமிழன் என்ற உணா்வை வெளிபடுத்த முடியாமல் எமது இனத்தை எங்களை வைத்தே விரட்டியடிக்க வைத்து எங்களின் தொப்புள் கொடி உறவை அறுத்தவர் ஜார்ஜ் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
காவலா் சங்கம் அமைக்க முற்படும் காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டவர் ஜார்ஜ் என்றும்,மெயில் மூலமாக குறைகளை கூற சொன்னவர், தற்போது பெயில் எடுப்பது எப்படி எனவும் சிந்தித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என கொக்கரித்த கடமை தவறாத ஜார்ஜ் போதை பொருளுக்கு ஆதரவளித்து கோடி கணக்கில் லஞ்சம் பெற்ற கண்ணியமிக்கவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
காவலா்கள் 100ரூபாய் லஞ்சம் பெற்றாலே பணியிடை நீக்கம், பணி மாற்றம் என உத்தரவு பிறப்பிக்கும் ஜார்ஜ் தற்போது 75 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதர்க்கு யார் தண்டிப்பது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிகாரமும் பதவியும் கைவசம் இருப்பதால் பல கடைநிலை காவலா்களை அடிமையாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
காவலா் தவறு செய்தாலோ 100ரூபாய் லஞ்சம் பெற்றாலோ வசை பாடி நடவடிக்கை எடுக்க கூறும் மக்கள் கோடிகணக்கில் லஞ்சம் பெற்றவா்களை என்ன செய்வீர்கள்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.