
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகிறார் கே.பி. மகேந்திரன். சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் அர்ச்சனா , ராதாகிருஷ்ணனை பின்னுக்கு தள்ளிவிட்டு கே.பி. மகேந்திரன் முன்னுக்கு வருகிறார். அவர் டிஜிபியாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக் கூறப்படுகிறது.
டிஜிபி பதவியில் வலுவானது சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். பல டிஜிபி பதவி இருந்தாலும் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி என்பது ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகளின் கனவு.
இதில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு வருவதற்கு முதல் மூன்று இடத்தில் உள்ள சீனியர் அதிகாரிகளுக்குத்தான் வாய்ப்பு. அவ்வாறு இல்லாமல் நான்காவது அதிகாரியாக உள்ளவரை நியமிக்க வேண்டுமானால் உளவுத்துறை , குற்றப்பிரிவு போன்றவைகளுக்கு டிஜிபியாக நியமித்து கூடுதலாக சட்டம் ஒழுங்கை கவனிக்க வைக்க முடியும்.
தற்போதுள்ள டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவ்வாறு வந்தவரே. இதற்கு முன்னர் தமிழக டிஜிபியாக அஷோக்குமார் இருந்தார் . பான் குட்கா விவகாரத்தில் அவர் அரசுக்கு வேண்டாதவாராக போய்விட அவர் ஓய்வு பெறும் முன்பே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அதற்கு அடுத்த இடத்தில் மூன்று இடத்திற்குள் தமிழக முதல்வருக்கு பிடிக்காத அர்ச்சனா ராமசுந்தரம் , திமுக முத்திரை குத்தப்பட்ட சேகர் , எந்த வம்பிலும் சிக்காத கே.பி. மகேந்திரன் இருந்தனர். அடுத்த இடத்தில் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருக்க இளையவரான டி.கே.ஆரை கொண்டு வந்தார் ஜெயலலிதா.
டி.கே.ராஜேந்திரன் வரும் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி அரசுக்கு டி.கே.ராஜேந்திரன் நெருக்கமாக இருந்த நிலையில் அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு கொடுக்க திட்டமிட்டிருந்தார் எடப்பாடி.
ஆனால் பான் குட்கா விவகாரத்தில் டி.கே.ராஜேந்திரன் பெயரும் உள்ளதால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க முடியாது. இந்நிலையில் புதிய டிஜிபியை தேர்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் இன்று கூட உள்ளது. இதில் தமிழக அரசு முதல் மூன்று இடத்தில் உள்ள ஒருவரை பரிந்துரைக்கலாம். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பார்.
தற்போது முதலிடத்தில் சீனியர் அதிகாரியாக் டெல்லி அயல்பணிக்கு நேபாள் எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரம் உள்ளார் இவர் 1980 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார் வரும் அக்டோபரில் பணி ஓய்வு பெறுகிறார் . இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் , ராதாகிருஷ்ணன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி , இவர் 1983 ஆம் ஆண்டு பிரிவு அதிகாரி. வரும் ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார்.
அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் மின்சார வாரிய விஜிலென்ஸ் டிஜிபியாக இருக்கும் கே.பி.மகேந்திரன் இவர் 1984 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி. 2019 ல் ஓய்வு பெறுகிறார். உள்ளார்.
இதில் அர்ச்சனா ராமசுந்தரம் அவரது கணவர் ராமசுந்தரம் இருவருமே திமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகள் என பெயரெடுத்தவர்கள். ஆகவே டெல்லி செல்வாக்கு இருந்தாலும் மாநில அரசு அவரை நிராகரிக்க வாய்ப்புண்டு. அடுத்து ராதாகிருஷ்ணன் அக்மார்க் திமுக பிராண்ட் அதிகாரி என்று பெயரெடுத்தவர். ஆகவே இவரும் நிராகரிக்கப்பட வாய்ப்பு உண்டு.
கடைசியாக எஞ்சி நிற்பது கே.பி. மகேந்திரன். பிரச்சனைகள் எதிலும் சிக்காத , கட்சி அரசியல் சாயம் பூசப்படாத அதிகாரி எனபதால் இவரையே தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே அடுத்த டிஜிபியாக கே.பி.மகேந்திரனே அறிவிக்கப்படலாம். அவர் இல்லாத பட்சத்தில் பாஜக மேலிடம் அழுத்தம் தரும் பட்சத்தில் அர்ச்சனா ராமசுந்தரம் டிஜிபியாகும் வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவே.
இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பார். இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வரலாம்.