
பெரம்பலூர்
ரேசன் பொருள்களை முறையாக வழங்கவில்லை என்று புகார் கொடுத்தால் 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு எட்டப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உறுதி அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது விநியோகத் திட்ட உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமை வகித்தார். சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா.சந்திரகாசி முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் வே.சாந்தா பேசியது:
"உணவுப் பாதுகாப்பு விதிகளின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதில் பெறப்படும் புகார் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு வட்ட, மாவட்ட மற்றும் நியாய விலைக்கடைகள் வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத்திட்ட பொருள்கள் எந்தவித சுணக்கமுமின்றி, முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகளை வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார் - பதிவாளர்கள் கண்காணித்து, ரேசன் பொருள்களை முறையாக வழங்காத விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டி ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், பொது விநியோகத் திட்ட பொருள்கள் வழங்குவதில் பாதிக்கப்பட்ட நபர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட குறைதீர் அலுவலரிடம் நேரடியாக எழுத்து வடிவில், மின்னஞ்சல், உதவி மையம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாக புகாரைத் தெரிவிக்கலாம்.
புகார்கள் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள், அதற்கான தீர்வை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அளிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) ச. மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ)) எல். விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் த. பாண்டிதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.