
பெரம்பலூர்
பெரம்பலூரில் பிச்சைக்காரரிடம் ரூ.60-ஐ திருடிய நான்கு சிறுவர்களை காவலாளர்கள் கைது செய்தனர். குடும்ப வறுமையால் திருடியதாக தெரிவித்த அவர்களை நீதிமன்ற உத்தரவுப்படி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், சித்தளியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய பொன்னுசாமி (45) பிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர், எளம்பலூர் சாலை சாய்பாபா கோவில் அருகே நடந்து வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக நான்கு சிறுவர்கள் வந்து திடீரென, பொன்னுசாமி பையில் வைத்திருந்த ரூ.60-ஐ திருடிக் கொண்டுச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பிச்சைக்காரரிடம் பணம் திருடியது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலை சமத்துவபுரம், சங்குபேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அதில், ஒரு சிறுவன் 9-ஆம் வகுப்பு பெரம்பலூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருவதும், மற்றவர்கள் படிப்பை நிறுத்திவிட்டதும், இவர்கள் குடும்ப வறுமை காரணமாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்தச் சிறுவர்களை கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து திருச்சி மலைக்கோட்டை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாக திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கைதாவது தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.