திமுகவுக்கு ஆதரவு: சீமான் அந்தர் பல்டி!

By Manikanda Prabu  |  First Published Sep 3, 2023, 12:55 PM IST

பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், நாம் தமிழர் கட்சி திமுகவுக்கு ஆதரவளிக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
 


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு தொகுதி மற்றும் அவரது சிட்டிங் தொகுதியான வாரனாசி ஆகிய இரண்டு தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக ஒரு தகவல் அண்மைக்காலமாகவே றெக்கை கட்டி பறக்கிறது.

2024 தேர்தலில் தென் மாநிலங்கள் மீது பாஜக கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக மிஷன் சவுத் எனும் திட்டத்தை அக்கட்சி செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட பரிசீலிப்பதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல்  அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

இதனிடையே, “ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், மக்கள் மன்றத்தில் பிரதமரை நோக்கி பல கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது. எனவே, அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அவர் போட்டியிடவில்லை என்றால், நான் போட்டியிடமாட்டேன். அந்தத் தொகுதிக்கு தங்கை ஒருவரை ஏற்கெனவே தேர்வு செய்து வைத்துள்ளேன்.” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து திமுக நேரடியாக களம் கண்டால், நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. திமுகவுக்கு ஆதரவளிக்கும் என சீமான் தடாலடியாக தனது முந்தைய கருத்தில் இருந்து பின் வாங்கியுள்ளார்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிடாமல் பெரும்பாலும் அதன் கூட்டணி கட்சிகளுக்கே அந்த தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் பட்சத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும்.” என்றார்.

முன்னதாக, நடிகர் விஜயலட்சுமி புகார் மீது சீமான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் என சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!