இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலைக்கு இத்தனை நாட்கள் எடுப்பதா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...

First Published Nov 18, 2017, 8:02 AM IST
Highlights
Will it take so many days to complete the work in two hours? Supreme Court asks Tamil Nadu government to ...


மதுரை

இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை இத்தனை நாட்களாக தாமதப்படுத்துவது ஏன்? என்று தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த அசோக்பத்மராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 24–ன் கீழ் ஒவ்வொரு மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து ஆட்சியர், மாவட்ட நீதிபதி ஆகியோர் ஆலோசனை செய்து தகுதியான வழக்கறிஞர்கள் பட்டியலை தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க முடியாது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் அரசு வழக்கறிஞர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. விதிகளின் அடிப்படையில் நான் உள்பட பலரை கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி பரிந்துரை செய்தார். ஆட்சியரும் எனது பெயர் உள்பட சிலரின் பெயர்களை பரிந்துரைத்தார்.

குறிப்பாக எவ்வித அரசியல் சார்பும் இல்லை என்பதால் உரிமையியல் மற்றும் குற்றவியல் பிரிவுகளுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அரசியல் தொடர்பு இல்லை என்பதற்காக எனக்கு அரசு வழக்கறிஞர்கள் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்காத சிலர், அந்தப் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே அரசாணை அடிப்படையில் மாவட்ட நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருப்பவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கவும், அதுவரை அந்த பணியிடங்களை நிரப்ப தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்? உயர்நீதிமன்றத்திலும் போதுமான வழக்கறிஞர்கள் இல்லை. பணியில் இருப்பவர்களும் உரிய ஈடுபாட்டுடன் பணியாற்றுவதில்லை.

நகராட்சி, வீட்டுவசதி வாரியத் துறைகளுக்காக நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர்கள் வழக்குகளில் ஆஜராவதில்லை. திறமையான வழக்கறிஞர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை பொறுத்தவரை அரசு செயல்படுகிறதா, இல்லையா? இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை இத்தனை நாட்களாக தாமதப்படுத்துவது ஏன்?“ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

click me!