சாலையோர வியாபாரிகளுக்கும் வங்கி கடன் - நிறைவேறுமா வியாபாரிகளின் கோரிக்கை?

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 14, 2018, 9:07 AM IST
Highlights

திருவாரூரில், தங்களுக்கும் வங்கியில் கடன் வழங்க வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள்  வலியுறுத்தினர்.

திருவாரூரில், தங்களுக்கும் வங்கியில் கடன் வழங்க வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள்  வலியுறுத்தினர். இவர்கள் ஊர்வலம் மற்றும் ஆண்டுப் பேரவைக் கூட்டத்தினை நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சாலையோர விபாரிகள் சங்கத்தினர் ஊர்வலம் மற்றும் ஆண்டுப் பேரவைக் கூட்டம் நடத்தினர். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இறுதியில் முத்துப்பேட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த ஊர்வலத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நகரத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் நகரச் செயலாளர் ரமேஷ், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டியன், ஆட்டோ சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் அனைவரும் கட்சி அலுவலகத்தில் ஆண்டுப் பேரவைக் கூட்டத்தினை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், "திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரை போடப்பட்டு வரும் அகல இரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்;

சாலையோர வியாபாரிகளுக்கும் வங்கியில் கடன் வழங்க வேண்டும்;

வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும், கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். 

இந்தக் கூட்டத்தில் சாலையோர வியாபாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 
 

click me!