
விவசாய நிலத்துக்கு சென்ற பெண்ணை காட்டு பன்றிகள் கடித்து குதறியது. அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே கருப்பன் கொட்டாய் கிராமத்தை சோந்தவர் பெரியசாமி (69).விவசாயி. இவரது மனைவி சென்னம்மாள் (60). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. தினமும் காலையில் சென்று, அங்கு விவசாய வேலைகளை கவனிப்பது, இவர்களுக்கு வழக்கம்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் சென்னம்மாள் தனது நிலத்துக்கு சென்றார். அப்போது காட்டு பன்றிகள் கூட்டமாக இருந்தன. அதை பார்த்ததும், அதிர்ச்சியடைந்த அவர், அலறியடித்து கொண்டு ஓடினார். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு எழமுடியாமல் ஆனாது.
இதை தொடர்ந்து, அவரை விரட்டி சென்ற காட்டு பன்றிகள், சென்னம்மாளை புரட்டி புரட்டி கடித்து குதறியது. சிறிது நேரம் கழித்து அவ்வழியாக சென்ற கிராம மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த சென்னம்மாளை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, சென்னம்மாள் பரிதாபமாக இறந்தார்.