காட்டெருமைகள் சண்டை; தலையில் கொம்புகள் சிக்கியதால் இரண்டும் உயிரிழப்பு…

Asianet News Tamil  
Published : Feb 16, 2017, 09:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
காட்டெருமைகள் சண்டை; தலையில் கொம்புகள் சிக்கியதால் இரண்டும் உயிரிழப்பு…

சுருக்கம்

ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் சண்டையிட்ட இரண்டு காட்டெருமைகளின் கொம்புகள் தலையில் சிக்கிக் கொண்டதால் இரண்டும் பரிதாபமாக உயிரிழந்தன

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள மந்தாடா பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன.

இங்குள்ள குடியிருப்புக்கு அருகில் நேற்று காலை 5 மணிக்கு இரண்டு பெண் காட்டெருமைகள் சண்டை போட்டுள்ளன.

இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் இது வழக்கமாக நடக்கும் சண்டை என்று கருதி அமைதியாக இருந்து விட்டனர். சிறிது நேரத்தில் அந்த காட்டெருமைகள் ஊட்டி – குன்னூர் சாலைக்கு வந்து சண்டையிடத் தொடங்கின. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

இந்தச் சண்டையில் இரண்டு காட்டெருமைகளின் கொம்புகள் ஒன்றுக்குள் ஒன்று சிக்கிக் கொண்டன. மேலும் ஒரு காட்டெருமையின் கொம்பு மற்றொரு காட்டெருமையின் தலையில் குத்தியது. கொம்புகளை விடுவிக்க இரண்டு காட்டெருமைகளும் போராடின. இதனை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் வனச்சரகர் சரவணக்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை கண்காணித்தனர். ஆனால் கொம்புகள் நன்றாக சிக்கி கொண்டதால் அதனை விடுவிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவரை அழைக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் கேத்தி கால்நடை மருத்துவர் பார்த்தசாரதி வரவழைக்கப்பட்டார். அவர் 2 காட்டெருமைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தினார். இதனால் 2 காட்டெருமைகளும் மயக்கம் அடைந்தன.

மயக்க நிலையில் இருந்த காட்டெருமைகள் ஊட்டி – குன்னூர் சாலையோரத்தில் படுத்து கிடந்தபோது, ஒரு ஆண் காட்டெருமை, இந்த பெண் காட்டெருமைகளை தேடி வந்தது., பெண் காட்டெருமைகளின் அருகில் சென்று சிறிது நேரம் முகர்ந்து பார்த்தது. பின், வனத்துறையினர் விரட்டியதும் சென்று விட்டது. ஆனால் அங்கிருந்தபடி சத்தம் போட்டுக்கொண்டு, பெண் காட்டெருமைகளை பார்த்தபடி நின்றது அனைவரது மனதிலும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து காட்டெருமைகளின் சிக்கி கொண்ட கொம்புகளின் முனைப்பகுதி வெட்டி அகற்றப்பட்டு, 2 காட்டெருமைகளும் விடுவிக்கப்பட்டன.

மயக்கம் தெளிந்து சிறிது நேரத்தில் காட்டெருமைகள் எழுந்து காட்டுக்குள் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் இரண்டு காட்டெருமைகளும் பரிதாபமாக இறந்தன.

இதனால் வனத்துறையினரும், மக்களும் கவலை அடைந்தனர். இந்த சம்பவத்தால் ஊட்டி - குன்னூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்கள் தெரிவித்த கருத்து:

“வனத்துறையில் போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லை. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு மட்டும் ஒரே ஒரு மருத்துவர் உள்ளார்.

வன விலங்குகள் அதிகம் உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் பாதிப்படைந்த வன விலங்குகளுக்கு விரைந்து சென்று சிகிச்சை அளிக்க முடியும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
6 மணி நேரம்.. விடாத அதிகாரிகள்.. சிபிஐ முன் செந்தில் பாலாஜி சொன்ன 'அந்த' ரகசியம்!