பகலில் காட்டுயானைகள் அட்டகாசம்; இரவில் சிறுத்தைப் புலிகள் வேட்டை - அச்சத்தில் மக்கள்...

First Published Mar 20, 2018, 8:30 AM IST
Highlights
Wild elephants rounds in day leopards hunting at night - people in fear ...


நீலகிரி 

நிலகிரியில் பகலில் காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டும், இரவில் சிறுத்தைப்புலிகள் பசுக்களை வேட்டையாடியும் வ்ருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைப் புலிகள், கரடிகள் என காட்டு விலங்குகள் அதிகளவில் உள்ளன. 

பசுந்தீவன தட்டுப்பாட்டால் பகலில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசப்படுத்துகின்றன. இரவில் சிறுத்தைப் புலிகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை பிடித்துக் கொன்று வருகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் பெரும் நட்டத்துக்கும், பீதிக்கும் ஆளாகி உள்ளனர்.

கூடலூர் தாலுகா தேவர்சோலை சர்க்கார்மூலா பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் தனது வீட்டில் ஐந்து பசு மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல பசுக்களை மேய்ச்சலுக்கு விட்டார். ஆனால், மாலை வீட்டுக்கு ஒரு பசு மட்டுமே வந்தது. 

இதனையடுத்து மற்ற பசுக்களை விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றனர். ஆனால், மாடுகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இரண்டு பசு மாடுகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த விஜயன் மற்றும் மக்கள் நேரில் சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தைப்புலி கடித்து விஜயனின் பசு மாடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. 

எனினும், மேலும் இரண்டு மாடுகள் எங்கு சென்றது என்பது தெரியாததால் காணாமல் போன பசுக்களை தேடும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்தை வன காப்பாளர் பிரகாஷ் பார்வையிட்டார்.

இதுகுறித்து கிராம மக்கள், "இறந்துபோன பசுக்களுக்கு இரண்டு வயது இருக்கும். கிராம பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது. இனி வரும் காலங்களில் கால்நடைகளை தாக்கும் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கிராம மக்கள் மற்றும் மக்கள் நலன் கருதி சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரினர். 

click me!