
திருமணமான 11 நாளில் கள்ள காதலனை ஏவி கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமிஎன்ற பெண்ணிற்கும் கடந்த ஜூன் 11-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இதைதொடர்ந்து, கடந்த 22 ஆம் தேதி சக்கரக்கோட்டை பகுதியில் கணேஷ்குமார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கணேஷ்குமாரின் கொலை வழக்கில் அவரது மனைவி பாக்கியலட்சுமியும் முன்னாள் காதலன் லோகநாதனும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து லோகநாதன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது மாமன் மகளான பாக்கியலட்சுமியை காதலித்து வந்ததாகவும், பாக்கியலட்சுமி தன்னை விட 5 வயது பெரியவள் என்பதால் திருமணம் முடித்து வைக்க வீட்டில் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
பின்னர், பாக்கியலட்சுமியை கட்டாயப்படுத்தி கணேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால்திருமணத்திற்கு பின்னரும் பாக்கியலட்சுமியுடன் தான் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த 20-ந் தேதி நானும் பாக்கியலட்சுமியும் சந்தித்தபோது எங்களுக்கு இடையூறாக இருக்கும் கணேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக கூறினார்.
மறுநாள் கணெஷ்குமாரை மதுக்கடைக்கு அழைத்துச்சென்று மது அருந்தியதாகவும் இரவு 11 மணிக்கு கோவில் பகுதிக்கு அழைத்துச் சென்று மது மயக்கத்தில் இருந்த கணெஷ்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.