
டாஸ்மக் கடைகளை சேதப்படுத்தும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள், சிறுவர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்தும், மது பாட்டில்கள் சாலையில் உடைத்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை சேதப்படுத்தும் கடும் நடவடிக்கை எடுக்க்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
மனுவில், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பெண்கள் போராட்டத்தால் பொதுசொத்துக்கள் சேதமடைவதாக கூறப்பட்டிருந்தது. இதனை மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கே. ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், டாஸ்மாக் கடையை யார் நடத்துகிறாரகள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.