
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2010ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதற்கான ஆணையையும் வெளியிட்டது. அதில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தெரிவித்தது.
இதற்கு தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகள் தமிழக மருத்துவ மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த விலக்கு நீக்கப்பட்டு, நீட் தேர்வு கட்டாயமானது.
இதையொட்டி வரும் 7ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் 2010ம் ஆண்டு அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற விதியை திருத்தி, நீட் தேர்வு மதிப்பெண்களுடன், ப்ளஸ்2 மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்த கோரி காட்டுமன்னார் கோயிலை சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த மனுவில், நீட் தேர்வு தொடர்பாக கடந்த மாதம் மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினேன். அதில், எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டு இருந்தது.
இந்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் போது நீங்கள் எதிர்ப்பது ஏன். தமிழகத்தில் திறமையான மருத்துவர்களை உருவாக்க வேண்டாமா?.
தரமற்ற ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்து ஆசிரியர்களாக வருவதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது என கேள்வி எப்பினர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை நாளை நடக்கும் என கூறி ஒத்தி வைத்தனர்.