
கௌந்தப்பாடி
ஈரோட்டில் உள்ள பள்ளியில், அமைச்சரை திருப்திபடுத்த காலாவதியான ஊசி மருந்துகளை ஏன் எங்கள் குழந்தைகளுக்கு போடுகிறீர்கள்? என்று தடுப்பூசி போடவந்த மருத்துவர்களை சிறைப்பிடித்த பெற்றோர் கேள்வி கேட்டனர்.
கௌந்தப்பாடி அருகே, ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி போட சென்ற மருத்துவ குழுவினர் சிறை பிடிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், கௌந்தப்பாடியில் உள்ள, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியை சேர்ந்த ஆயிரத்து 270 மாணவ, மாணவியருக்கு ஏற்கனவே ரூபெல்லா மற்றும் தட்டம்மைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த, 27 அன்று விடுபட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஓடத்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திவாகர், நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் மூவர், கிராம சுகாதார செவிலியர் இருவர் பள்ளிக்கு சென்றனர்.
அங்கிருந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள், மருத்துவ குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சரை திருப்திபடுத்த காலாவதியான ஊசி மருந்துகளை ஏன் எங்கள் குழந்தைகளுக்கு போடுகிறீர்கள்? என்று கூறி, மருத்துவக் குழுவினரை சிறைப் பிடித்தனர்.
இதனால், மூன்று மணி நேரம் மருத்துவ குழுவினர், பள்ளி வளாகத்திலேயே அடக்கப்பட்டுக் கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த, கௌந்தப்பாடி காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, பெற்றோருடன் பேசி மருத்துவ குழுவினரை மீட்டனர்.