
புதுச்சேரியிலும் முடக்கப்பட்டது பெப்சி, கோக் …பொது மக்கள் பெரும் ஆதரவு…
தமிழகத்தைப் போன்று வணிகர்கள் அறிவித்தபடி, புதுச்சேரியிலும் நேற்று முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நடைபெற்ற பிரமாணடமான போராட்டம் வெற்றி பெற்றது.
அந்த போராட்டத்தின் போது அயல்நாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும் என, இளைஞர்களும், மாணவர்களும் வலியுறுத்தினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிநாடழ்ழ்நாடு மற்றும் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு, பெப்சி, கோக் உள்ளிட்ட அன்னிய நாட்டு குளிர்பானங்கள் மற்றும் அதன் சார்பு தயாரிப்பு குளிர்பானங்களை மார்ச் 1ம் தேதி முதல் விற்பனை செய்வதில்லை என அறிவித்தது.
மேலும் இதுகுறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் கடைகளுக்கு வழங்கப்பட்டன.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டது.
இதே போன்று புதுச்சேரியில் உள்ள கடைகளிலும் நேற்று முதல் வெளிநாட்டு குளிர் பானங்களான பெப்சி, கோக் விற்பனை நிறுத்தப்பட்டது. வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.