வறண்ட குளத்தில் கருகிய நிலையில் பெண்ணின் சடலம்; தீக்குளிப்பா? எரித்துக் கொல்லப்பட்டாரா? தொடரும் விசாரணை…

First Published Mar 2, 2017, 8:56 AM IST
Highlights
police found womans charred body in the pond dry suicide or murder Investigations continue


குஜிலியம்பாறை

திண்டுக்கல்லில் உள்ள குளத்தில் கருகிய நிலையில் பெண்ணின் சடலம் காவலாளர்களால் மீட்கப்பட்டது. அந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது எரித்து கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை காவலாளர்கள் தொடர்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள மல்லப்புரம் ஊராட்சி நெல்லம்பாறையைச் சேர்ந்தவர் மனோகரன் (40). இவருடைய மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு அதிரூபன், ஆனந்தரூபன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனோகரன் இறந்து விட்டார். இதையடுத்து மாமியார் அமராவதியுடன் லட்சுமி தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக லட்சுமிக்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலையில் கடைத் தெருவுக்கு சென்றுவருவதாக மாமியாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த அமராவதி, லட்சுமியின் தந்தையான கட்டையப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தனது மகள் குறித்து விசாரித்துள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்ற விவரம் தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை நெல்லம்பாறை பெரியகுளத்துக்குள் கருகிய நிலையில் பெண் பிணம் கிடப்பதாக குஜிலியம்பாறை காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவலாளர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து காவலாளர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கருகிய நிலையில் இறந்தது லட்சுமி தான் என்பது தெரிய வந்தது.

பின்னர், லட்சுமியின் தந்தை, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர்கள், கருகிய நிலையில் கிடந்த லட்சுமியின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவலாளர்களிடம் சொன்னது:

“வறட்சி காரணமாக குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி யாரும் செல்வதில்லை.

இந்த நிலையில் அந்த வழியாக விறகு சேகரிக்க சென்றவர்கள் கருகிய நிலையில் பெண் பிணம் கிடப்பதை பார்த்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாங்கள் பார்த்த போது, பிணத்தின் அருகே மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் அந்த பெண் அணிந்திருந்த செருப்பு ஆகியவை இருந்தது.

இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என எண்ணினோம். ஆனால், அப்பகுதி மக்கள் “அவர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்” என தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் எரித்துக் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் லட்சுமியின் தந்தை தனது மகள் வயிற்றுவலியை தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்துள்ளார். அதன் பேரிலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றுத் தெரிவித்தனர்.

click me!